தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம்
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., இன்னும் ஓரிரு தினங்களில் ஓய்வுப் பெற உள்ள நிலையில், அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. புதிய தலைமைச் செயலாளருக்கானத் தேர்வு பட்டியலில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தலைவராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளர் சிவதாஸ் மீனா இ.ஆ.ப., வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் இ.ஆ.ப. ஆகியோர் இருந்தனர். இவர்களில் சிவதாஸ் மீனா இ.ஆ.ப., புதிய தலைமைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் சிவதாஸ் மீனா கவனத்துவரும் நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் பதவி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட உள்ளது. பொதுத்துறை செயலாளராக நந்தகுமார் நியமிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது மாற்றப்படுவார் என்றும் தெரிகிறது.