ஆயிரம் கோடியை வசூல் செய்து சாதனை படைத்த ‘ஜவான்’ திரைப்படம்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் வெளியான 18 நாட்களில் 1004.92 கோடியை வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஷாருக்கான் உடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தி,தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படம் ஒவ்வொரு நாளும் வசூல் சாதனையை படைத்து வந்தது.
உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் குறிப்பாக தமிழகத்தில் 400கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளிலிருந்து உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வந்தது. படம் வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாயும் இரண்டாவது நாளில் 240.47 கோடியும் மூன்றாவது நாளாக நேற்று 384.69 கோடி ரூபாயையும் வசூல் செய்தது இந்நிலையில் நான்காவது நாளில் உலகம் முழுவதும் 520.79 கோடி ரூபாயும் வசூல் செய்திருந்தது.
இந்நிலையில் படம் வெளியான 4வது நாளில் 500 கோடிக்கு மேலும் 18 நாட்களில் 1004.92 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அட்லீ மற்றும் அனிருத் பாலிவுட்டில் அறிமுகமனா முதல் திரைப்படமே 1000 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பது கோலிவுட் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ஆயிரம் கோடி வசூலை பெற்று தந்த முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையும் இயக்குனர் அட்லீக்கு கிடைத்துள்ளது. ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் இரண்டாவது திரைப்படம் ஜவான் என்பது குறிப்பிடத்தக்கது.