அரைவேக்காட்டுத்தனமாக பேசி தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளுவர், வள்ளலார், மகாத்மா காந்தி, காரல் மார்க்ஸ் என தமிழக, இந்திய, உலகு தழுவிய செழுமையான மரபுகளையெல்லாம் கேள்விக்குள்ளாக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஆர்.என். ரவி தற்போது வெண்மணி தியாகிகளை குறிவைத்திருக்கிறார். உழைப்பாளி மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்.என். ரவி அவரது தத்துவத்தின் படி எங்காவது சென்றிருக்க வேண்டுமென்றால் அது 44 உயிர்களை உயிரோடு கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடு சமாதி தான் பொருத்தமான இடமாக இருந்திருக்கும். “படுகொலை செய்யப்பட்ட 44 ஏழை கூலித் தொழிலாளர்கள் நினைவு கூறும் வகையில் விலையுயர்ந்த கான்கீரிட் கட்டுமானம் ஒரு நினைவுச் சின்னமாக அமைந்திருப்பது தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்கூரிய அவமானம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி அழுதிருக்கிறார். இது ஓநாய் அழுகை. தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பற்றி கிஞ்சிற்றும் அறியாது பேசியிருக்கிறார்.
வெண்மணி நினைவகம் என்பது மகத்தான நினைவுச் சின்னம். “செங்கொடியை இறக்கு என்ற போதும் உயிர்நீத்தாலும், உயிரிலும் மேலான செங்கொடியை இறக்க மாட்டோம்” என்று சபதமேற்ற தியாகிகளின் நினைவுச் சுடர் அது. அதனால் தான் ஏழை, எளிய விவசாயத் தொழிலாளிகளும், விவசாயிகளும், கூலித் தொழிலாளிகளும், கருத்தால் உழைக்கும் மக்களும், கம்யூனிச நேசர்களும் தந்த கொடையால் தார்மீக வலுவோடு எழுந்து நிற்கிறது. இதில் ஏழை குழந்தைகள் தங்கள் உணவில் ஒரு கவளத்தை குறைத்துக் கொண்ட கொடையும் அடங்கியிருக்கிறது. இதைத்தான் ரவி கேலிக்குரிய அவமானம் என கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். வகையறா பாஜகவின் முந்தைய பதிப்பான ஜனசங்கம், கூலி உயர்வு கேட்ட போது யாரோடு நின்றார்கள்? உழைக்கும் மக்கள் பக்கம் நின்றார்களா? குழந்தைகள் உட்பட தீயில் கொளுத்தப்பட்ட போது அதை ஆர்.எஸ்.எஸ். கண்டித்ததா? சங்பரிவாரின் எந்த அமைப்பாவது அந்த கிராமத்திற்கு போனதா? அரைநூற்றாண்டு ஆன பிறகும் சங்பரிவார் ஆட்கள் அந்த நினைவிடத்திற்குச் எவரேனும் சென்றதுண்டா? தன்னை பார்க்க வரக் கூடாது என்று அந்த போராட்டத்தில் உயிர்பிழைத்து இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் பழனிவேல் ‘வராதே’ என்று சொன்ன பிறகும் வலியப்போய் நினைவுச் சின்னத்தை நிந்தித்துவிட்டு வருவது செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத மனநிலை.
பொருளாதார ஆதிக்கத்தை, சாதி ஆதிக்கத்தை, மத ஆதிக்கத்தை, ஆணாதிக்கத்தை, நிற ஆதிக்கத்தை, மொழி ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பும் அதற்காகவே அவதாரம் எடுத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சை. பதவி சுகத்திற்காக ஆராதிக்கும் ரவிகளுக்கு எல்லாவிதமான ஆதிக்கங்களுக்கும் எதிராக சமத்துவத்தை நிலைநாட்ட சர்வபரி தியாகத்திற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட்டுகளையும், அத்தோடு துணை நிற்கும் உழைப்பாளி மக்களையும் புரிந்து கொள்வதற்கான மனமும், திறனமும் கிடையாது. உண்மையில் ஆர்.என். ரவி போன்ற ஒருவர் அந்த பூமியில் கால் வைத்தது தான் அந்த மகத்தான தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். ஆர்.என். ரவியின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. குடியரசுத் தலைவரே ஆனாலும் பெண் என்றால், பழங்குடியினர் என்றால், கைம்பெண் என்றால், தலித் என்றால் கடவுளைக் கூட காண வரக்கூடாது என ஆதிக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். வகையறாவுக்கு ஏழைகளின் வலியோ அவர்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கம்யூனிஸ்ட்டுகளின் தியாகமோ தெரியாது.
ஏதோ பிரதமர் வீடு கட்டும் திட்டம் சர்வரோக நிவாரணி போலவும், இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட குடிசைகளே இல்லாமல் மாற்றிவிட்டது போலவும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். விருந்தினர்கள் வந்தால் பச்சை துணி போட்டு மறைப்பது, டெல்லியில் ஜி20 மாநாட்டின்போது குடிசை வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது போன்ற அர்ப்பத்தனமான காரியங்கள்தான் அவர்களது வீடு கட்டும் திட்டம். ஒரு வீட்டிற்கு ரூபாய் 1,20,000 என்று நிர்ணயித்து அதிலும் 60 சதவிகிதம் அதாவது ரூபாய் 72,000 மட்டுமே ஒன்றிய அரசாங்கம் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு ஒரு வீட்டிற்கு 1,68,000 ரூபாய் கூடுதலாக வழங்குகிறது. அதிலும் கூட பிரதமர் வீடு கட்டும் திட்டம் என்று மோசடியாக பேர் வைத்துள்ளனர். இந்த லட்சணத்தில் அது அங்கு பயன்படுத்தபடவில்லை, நிர்வாக திறமையில்லை, ஊழல் என்று ஆளுநர் சொல்லியிருப்பது விரக்தியால் ஏற்பட்ட பிதற்றலே தவிர வேறொன்றும் இல்லை.
தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான சாம்பியன் செங்கொடி இயக்கம்தான். நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு ஆளாகி, அரைநூற்றாண்டுக் காலமாக அடிமைகளாக வாழ்ந்த மக்கள் இன்று தலைநிமிர்ந்து நடக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் செங்கொடி இயக்கத்தின் வீரமிக்க போராட்டமும், தியாகமும்தான். குத்தகை விவசாயிகளாக உழன்று கொண்டிருந்தவர்களை போராட்டங்கள் பல நடத்தி உழுபவனுக்கே நிலத்தை சொந்தமாக்கிய இயக்கமும் செங்கொடி இயக்கம்தான். இப்படிப்பட்ட தியாகங்களுக்கு சொந்தக்காரர்கள் கம்யூனிட்டுகள். இந்த தியாக வடுக்களை கொண்ட இயக்கம் செங்கொடி இயக்கம் என்பதை ஆளுநர் ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, ஆளுநர் ரவி தன்னால் புரிந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை பற்றி பேசாமல் மௌனம் காப்பதே நல்லது. அரைவேக்காட்டுத்தனமாக பேசி தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.