வள்ளலாருக்கு காவி உடை போட பார்க்கிறார்கள்- கே.பாலகிருஷ்ணன்
முந்தய அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு துறையில் ஊழல் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் கூறிய புகாரை தமிழக அரசு விரைவாக விசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “குறுவை சாகுபடிக்காக தமிழக அரசு 90 கோடி ரூபாய் செலவில் சிறப்பாக பாசன ஆறுகளை தூர்வாரி உள்ளது பாராட்டக்கூடியது. குறுவை சாகுபடிக்கு தேவையான காவிரி நீரை கர்நாடக அரசிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும். வள்ளலார் சாதியை எதிர்த்தவர். ஆனால் ஆளுநர் ரவி சனாதனத்தின் உச்சம் என்று பேசியது கண்டனத்திற்குரியது. வள்ளலாருக்கு காவி உடை போட பார்க்கிறார்கள். ஆளுநர் காரல் மார்க்ஸ் பற்றி தவறாக பேசுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
ஆளுநரை எதிர்த்து அனைத்து தரப்பினரும் போராடக்கூடிய நிலை ஏற்படும். குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடனை வழங்க வேண்டும். இன்று பா.ஜ.க வை தோற்கடிக்க பீகாரில் எதிர்கட்சியினர் ஒரு அணியாக திரண்டுள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனையும் புறக்கணிக்கிற பா.ஜ.க வை அ.தி.மு.க முதுகில் சுமக்க கூடாது, பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது. 500 டாஸ்மாக் கடைகளை மூடியதற்கு பாராட்டு.
கூட்டுறவு துறையில் ஊழல் குறித்த அறப்போர் இயக்கத்தின் புகாரை தமிழக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு துறை மோசடிக்கான நிறுவனங்களை பிளாக் லிஸ்டில் வைக்க வேண்டும். செறியூட்டப்பட்ட அரிசி எல்லாருக்கும் தேவைப்படாது. தேவைப்படுபவர்களுக்கு மட்டும் ரேசன் கடைகள் மூலம் வழங்கலாம்” என்றார்.