கலாஷேத்ரா பாலியல் புகார்- மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்திரா கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதை அடுத்து அந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கலாஷேத்திரா சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள், பாலியல் தொல்லைகள் கொடுக்கிறார்கள் என்று கல்லூரி மாணவிகள் புகார் அளித்திருக்கிறார்கள். கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இந்த புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவிகள் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள்,
கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். தற்போது தேர்வு நடைபெற்றுவருவதால், மாணவி, மாணவிகளிடம் தேர்வு முடிந்த பிறகு அடுத்தவாரம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் விசாரணை அறிக்கையை 6 வாரங்களுக்குள் அரசிடம் சமர்பிக்க மனித உரிமை ஆணையம் திட்டமிட்டுள்ளது.