கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நடந்த துக்க நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். அப்போது அங்கு வந்த அனைவருக்கும் கள்ளச்சாராயம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18, 19-ம் தேதிகளில் நடந்த இந்த சம்பவத்தின்போது மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அனைவரும் குடித்தது தெரியவந்துள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 225 பேர் விஷச்சாராயம் குடித்து மருத்துவமனைகளை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷச்சாராயம் குடித்த பலரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில், இந்தச் சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை 58 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று (ஜூன் 26) காலை கருணாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் சேலம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமநாதன் (62) மற்றும் ஏசுதாஸ் என்ற இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இன்று மதியம் 1 மணி நிலவரப்படி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் 91, சேலத்தில் 30, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மரில் 9 பேர், ராயபேட்டை அரசு மருத்துவமனையில் 1 என மொத்தம் 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.