கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 49 பேர் உயிரிழந்த நிலையில், மெத்தனால் அருந்துவதால் ஏற்படும் தீமைகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 90 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளச்சாராயத்தில் எத்தனாலுக்கு பதிலாக மெத்தனால் கலந்ததே உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. எத்தனால் என்பது பழச்சாறுகளை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுவதாகும். ஆனால் மெத்தனால் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு எரிபொருள் வகையை சேர்ந்தது.
மெத்தனால் ரத்தத்தில் கலந்தால், வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவர் 40 மி.லி. மெத்தனால் அருந்தினால் உயிரிழப்பு ஏற்படும் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், ரத்தத்தில் ஒருமுறை மெத்தனால் கலந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என எச்சரித்துள்ளனர்.