கன்னியாகுமரியில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் படகு சேவை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கன்னியாகுமரியில் குமரிமுனை, அஞ்சுகிராமம், தோவாளை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும் குமரி கடலில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு அருகே சென்று பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மணக்குடி, கோவளம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை