Homeசெய்திகள்தமிழ்நாடுஇப்போது தமிழ்நாட்டை கண்காணித்து தில்லிக்கு தகவல் சொல்லும் ஒரு எடுபுடி ஆளாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்...

இப்போது தமிழ்நாட்டை கண்காணித்து தில்லிக்கு தகவல் சொல்லும் ஒரு எடுபுடி ஆளாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் – கருணாஸ்

-

இப்போது தமிழ்நாட்டை கண்காணித்து தில்லிக்கு தகவல் சொல்லும் ஒரு எடுபுடி ஆளாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாடு பிரித்தானியர்களிடம் அடிமைபட்டு இருந்த காலத்தில், பரந்து விரிந்திருக்கிற நமது இந்திய நிலப்பரப்பு முழுவதையும் கண்காணிக்க சிரமப்பட்ட வெள்ளைகாரர்கள், தங்களுக்கென்று ஒரு எடுபுடி ஆள் தேவைப்பட்டது. அப்படி அந்தந்த பிராந்தியத்தை கண்காணித்து தகவல் சொல்ல உருவாக்கிய பதவிதான் இந்த ஆளுநர் பதவி! இப்போது தமிழ்நாட்டை கங்காணித்து தில்லிக்கு தகவல் சொல்லும் ஒரு எடுபுடி ஆளாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்! ஆளுநர் பணி என்பதே மாநில சட்டமன்றங்களில் இயற்றப்படும் மசோதாக்களையும், தீர்மானங்களையும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கிகொடுப்பதே ஆகும்.

ஆனால் அந்த பணியை ஒரு நாளும் செய்ததில்லை ஆளுநர் ஆர். என். ரவி. மாநிலங்களுக்கு தேவையான மசோதக்களை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் ஆர்.என். ரவி அதை கிடப்பில் போடுவதும் அல்லது திரும்ப அனுப்புவதும், மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசை நடத்துவதும் என்று இந்திய அரசியலமைப்புக்கு எதிரான வேலையை தொடர்ந்து செய்யும் ஆளுநர் நமக்கு தேவையா? ஆகவே ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்குவதே நமக்கு நிரந்தர தீர்வு!.. கடந்த இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு எதேச்சதிகார போக்கை கடைப் பிடித்துள்ளார் ஆளுநர் ஆர் என்.ரவி.

போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த முறைகேடு நடத்தியவர் முனைவர் இரா.ஜெகநாதன அது மட்டுமின்றி, பல்வேறு கல்வியியல் தொடர்பான குற்றங்களை செய்துள்ளார் என்று நீதிமன்றம் நிரூபித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது, அரசு செயலர் விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளியான பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் இரா.ஜெகநாதனுக்கு அவர் பதவி காலம் முடிந்த நிலையில், மேலும் ஒராண்டு காலம் பதவி நீட்டிப்பை ஆளுநர் வழங்கி இருப்பது உயர்கல்வி மாண்புக்கு கல்வியல் மரபுக்கும் எதிரானதாகும்.

பல்கலைக்கழக விதிகளின் படி ஆட்சிக்குழுவின் பிரதிநிதி ஒருவர், ஆட்சிப் பேரவையின் பிரதிநிதி ஒருவர் என இருவர் தேர்வு செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதேபோல் அக்குழுவின் அமைப்பாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி என ஒருவர் பெயர் ஆளுநருக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இந்த மூன்று பெயர்கள் அடங்கிய பட்டியல் ஆளுநர் மாளிகையால் வெளியிடப்பட்டு அந்த அறிவிப்பு அரசிதழில் வெளியான பிறகுதான் புதிய துணைவேந்தர் தேர்வுக்கான பணிகள் தொடங்கும். இதை எதையுமே ஆளுநர் பொருட்படுத்தாது தான்தோன்றித்தனமாக செயல்படுவது அடாவடி அரசியல் போக்கு!

ஜெகநாதன் மீதான ஜாமீன் ரத்து வழக்கு விசாரணையும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மூன்றாண்டு காலம் மோசமான நிர்வாகசீர்கேடு செய்து, பல்கலைக்கழகத்தை தவறாக பயன்படுத்திய முனைவர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். அதுமட்டுமின்றி புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவின் அறிவிப்பை வெளியிடாமலும் ஆளுநர் மாளிகை திட்டமிட்டே தாமதம் செய்து இந்த பணி நீட்டிப்பை வழங்கி உள்ளது. புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கான தேர்தல் நடைமுறைகள் அரசிதழில் வெளியிடப்பட்டு ஆட்சிக் குழு, ஆட்சிப்பேரவை பிரதிநிதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன.

அவற்றைத்தூக்கி வழக்கம் போல கிடப்பில் போட்டுவிட்டு ஆளுநர் சர்ச்சைக்குரிய நபருக்கு பணி நீட்டிப்பு வழங்கி இருப்பது சட்ட விரோதமான சர்வாதிகார திமீர்த்தனம்! தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் திட்டங்களை முடக்குவதற்காகவும், உயர்கல்வித் துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்புக்கு சவால் விடும் விதமாகவும் இந்த பணி நீட்டிப்பை ஆளுநர் வழங்கி இருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த துணைவேந்தர் பதவி நீட்டிப்பை திரும்பப் பெறவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ