தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை நடிகையும், பாஜக மூத்த தலைவருமான குஷ்பு ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த நடிகை குஷ்பு, கடந்த 2020ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, நாட்டில் நடைபெற்ற பெண்கள், குழந்தைகள் தொடர்பான விவகாரங்களை நேரில் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று குஷ்பு ராஜினாமா கடிதத்தை மகளிர் ஆணைய அதிகாரிகளுக்கு அனுப்பிய நிலையில், 30ஆம் தேதி கடிதம் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, நேற்று குஷ்பு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது. பதவி விலகலுக்கான காரணம் குறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளிக்காதது குறிப்பிடத்தக்கது.