திருப்பதியில் கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்பு
திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை கடத்தப்பட்ட இரண்டு வயது சிறுவன் அருள் முருகன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை கடத்தப்பட்ட இரண்டு வயது சிறுவன் அருள் முருகனை அவனது சித்தப்பாவான அவிலாலா சுதாகர் அதிகாலை 3.30 மணியளவில் ஆட்டோவில் ஏற்றிச் அழைத்து சென்றுள்ளார். ஏர்பேடு மண்டலம் மாதவமாலா கிராமத்தில் வசிக்கும் சுதாகரின் மூத்த சகோதரி தனம்மாவிடம் சிறுவனை வழங்கி உள்ளார். காலை முதல் தொலைக்காட்சிகளில் சிறுவன் காணாமல் போனது குறித்து செய்திகள் வந்ததை பார்த்த தனம்மா சிறுவன் முருகன் குறித்து ஊர் பஞ்சாயத்து தலைவர் கரிமுல்லாவிற்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து கரிமுல்லா குழந்தையுடன் ஏர்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கூறியதால் தனம்மா குழந்தையை ஏர்பேடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தார். திருப்பதியில் காணாமல் போன குழந்தை ஏர்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து குழந்தையை திருப்பதிக்கு போலீசார் கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன குழந்தை கிடைத்ததில் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையை கடத்தியது உண்மையிலேயே சித்தப்பாவா அல்லது வேறு யாராவதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.