மழையால் பெரிய அளவில் சேதம் இல்லை – அமைச்சர்
சென்னையில் மழை மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையில் கணேசபுரம் சுரங்கப்பாதையில்தான் மழைநீர் தேங்கியுள்ளது. அதை வெளியேற்றும் பணி நடைபெற்றுவருகிறது. கனமழையால் சென்னையில் 6 இடங்களில் மரங்களின் 38 கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. சென்னையில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் எந்தவித உயிர்ச்சேதமும், பொருள் சேதமும் ஏற்படவில்லை. நகராட்சிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயாராக உள்ளனர். தமிழக பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 40 பேர் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளனர். பருவமழை மட்டுமின்றி இதுபோன்று திடீரென பெய்யும் மழையை எதிர்கொள்ளவும் அரசு தயார்.
மழை பாதிப்பு குறித்து 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறோம். கடந்த மழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எந்த மாவட்டத்திலும் தற்போது வரை சேதம் இல்லை. பருவம் தவறிய மழை மற்றும் திடீர் மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீரை உடனடியாக மோட்டார்கள் மூலம் அகற்றிவருகிறோம். எந்த இடத்திலும் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் மழைநீரை அகற்றும்பணி நடைபெற்றுவருகிறது. மழைநீர் அகற்றும் பணி தொடர்பான விவரங்களை முதலமைச்சர் திருவாரூரில் இருந்து கேட்டறிந்தார். திருவாரூரில் இருந்தபடி முதலமைச்சர் ஸ்டாலின் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்” என்றார்.
இதேபோல் மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “சென்னையில் இதுவரை பெரிய அளவுக்கு மழை பாதிப்பு இல்லை. தொடர்ந்து அதிகாரிகளுடன் மழை பாதிப்பு தொடர்பாக பேசி வருகிறேன். தாழ்வான பகுதிகளை கண்காணிக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. விழுந்த மரங்களை உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.