கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து 7 முறை அழைப்பு வந்ததை இன்டர்போல் காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் சேகரித்து உள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் CBCID தரப்பில் ADSP முருகவேல் தலைமையிலான போலீசாரும், குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் ஜித்தின் ஜாய், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேரும் ஆஜராகினர்.
விசாரணை துவங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் சார்பில் கோடநாடு வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என ஜித்தின் ஜாய் தரப்பில் மனுதாக்கல் செய்யபட்டது. அதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
அதனை தொடர்ந்து சிபிசிஐடி குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் கோடநாடு பங்களாவில் ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கையின் நகல் கேட்கபட்டது. அப்போது குறிக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நகலை வழங்க முடியாது என்று தெரிவித்ததுடன் கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பு குறித்தும், வாகன விபத்து குறித்தும் அந்த அறிகையில் உள்ளதாகவும், கொலை, கொள்ளை நடந்த சில தினங்களில் கனகராஜ்க்கு 7 முறை வெளிநாட்டிலிருந்து தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் அது குறித்தான தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளதால் இது போன்ற புலன் விசாரணை நடைபெறும் நேரத்தில் எதிரிகளுக்கு நிபுணர் குழு நகலை வழங்கினால் புலன் விசாரணை பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் காதர் உத்தவிட்டார்.