நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி
கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருவதாக என்எல்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது.
2000-க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து வளையமாதேவி பகுதியை சுற்றி வளைத்துள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம், அங்கு 30-க்கும் மேற்பட்ட இராட்சத எந்திரங்களைக் கொண்டு வந்து வேளாண் விளைநிலங்களில் இறக்கி, பயிர்களை சேதப்படுத்தி, அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பதை கண்டு விவசாயிகள் செய்வதறியாது தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து என்.எல்.சி. தரப்பு அளித்துள்ள விளக்கத்தி, “நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்றுவருகிறது. நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை. நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகை முழுமையாக வழங்கப்பட்ட பிறகே இந்த பணிகள் நடைபெற்றுவருகிறது. இழப்பீட்டு தொகை வழங்கிய பின்பும் மனிதாபிமான அடிப்படையில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதி அளித்திருந்தோம். கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை அறுவடை செய்யவும் அனுமதி அளித்துள்ளோம்” எனக் கூறியுள்ளது.