கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மேற்கொண்டுள்ள முயற்சிகளை தமிழ்நாடு அரசு ஆரம்பம் முதலே எதிர்த்து வருவதாகவும், மேகதாது திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளதாகவும், இந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தினை நிராகரிக்குமாறு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பிலும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவின் மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த, தமிழ்நாடு மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.