கிருஷ்ணகிரி நகர் அருகே சிறுத்தை புலி நடமாட்டம் கண்டறியப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி நகரின் அருகேயுள்ள ஜாகிர் நாட்றம்பள்ளி ஊராட்சி குல்நகர் பகுதியில் கடந்த 9ஆம் தேதி சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் அப்பதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் குல்நகர் பகுதியில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிரு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சிறுத்தைப்புலி போன்ற தோற்றம் கொண்ட மர்ம உருவம் சாலையில் ஓடுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
அதன் பேரில் வனத்துறையினர் அங்குள்ள காலடித்தடங்கள் உள்ளிட்ட மாற்றுத் தடயங்களை தீவிரமாக ஆராய்ந்தபோது குல்நகர் பகுதியில் சிறுத்தைப்புலி வந்து சென்றதற்கான ஆதாரத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். எனினும் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சிறுத்தை புலி யார் கண்ணிலும் தென்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 தினங்களாக அங்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சிறுத்தை புலி அங்கிருந்து இடம்பெயர்ந்து இருக்கலாம் என தெரிகிறது. இதனிடையே சிறுத்தைப்புலி குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வனத் துறையினர் குல்நகர் பகுதிக்கு வந்தது சிறுத்தை புலிதான் என்பதை உறுதி செய்தபோதிலும், பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும், கடந்த 2 நாட்களாக சிறுத்தைப்புலி இந்த பகுதிகளில் எங்கும் தென்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் வனத்துறையினர் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனினும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.