திமுகவின் பவள விழா ஆண்டு நிறைவடையும் இந்த சிறப்புக்குரியத் தருணத்தில், கழகத்தின் கறுப்பு – சிவப்புக் கொடியினை இல்லந்தோறும் ஏற்றிடுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து தமிழ் மக்களின் உணர்வோடு கலந்திட்ட நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டு நிறைவடைகிறது. இந்த சிறப்புக்குரியத் தருணத்தில், கலைஞரின் உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும், ‘இல்லந்தோறும் கழகக் கொடி’-யை ஏற்றிட வேண்டுமென கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தந்தைப் பெரியாரின் கொள்கைகளை – பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களை – முத்தமிழறிஞர் கலைஞர் தந்த முழக்கங்களை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் இன்னும் வலிமையோடு உயர்த்திப் பிடித்திட கழகத்தின் கறுப்பு – சிவப்புக் கொடியினை இல்லந்தோறும் ஏற்றிடுவோம்.
பழையக் கொடிக்கம்பங்களை புதுப்பித்து, கழகத்தின் மூத்த முன்னோடிகளைக் கொண்டு கழகக்கொடி ஏற்றுவதோடு, அலுவலகங்கள் – வணிக வளாகங்கள் என நம் கழக உடன்பிறப்புகளுக்கு சொந்தமான அத்தனை இடங்களிலும் கறுப்பு – சிவப்புக் கொடி உயரப் பறக்கட்டும். கழகம் என்றும் வெல்லட்டும்!, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.