தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தல் 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை கடந்த வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்ட நிலையில், இதனையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான கடந்த 30ஆம் தேதி ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி தினத்தன்று ரூ.235.94 கோடி என மொத்தம் ரூ.438.53 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.29.10 கோடி குறைவாகும். நடப்பு ஆண்டு அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.101.34 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
சென்னை மண்டலத்தில் கடந்த 30ம் தேதி ரூ.47.16 கோடிக்கும், தீபாவளி அன்று ரூ.54.18 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. மதுரையில் நவ.30ல் ரூ.40.88 கோடி, நவ. 31ல் ரூ.47.73 கோடிக்கும், திருச்சியில் நவ.30ல் ரூ.39.81 கோடி, தீபாவளி அன்று ரூ.46.51 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல் சேலத்தில் 30ம் தேதி ரூ.38.34 கோடி, தீபாவளி அன்று ரூ.45.18 கோடி, கோவை மண்டலத்தில் கடந்த 30ம் தேதி ரூ.36.40 கோடி, தீபாவளி அன்று ரூ.42.34 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.