Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் There...

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் There is no need to fear against Madras eye – Ma. Subramanian

-

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ்-ஐ பாதிப்புக்கு பயன்படுத்தும் கண் மருந்து என்பது போதுமான அளவு கையிருப்பில் உள்ளதென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்ட பின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய் பரவல் தொடர்ச்சியாக இருக்கும் என்றார். அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி மெட்ராஸ்-ஐ தாக்கம், கூடுதலாகி வருகிறது என அவர் கூறினார்.

சென்னையில் கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் எழும்பூர் கண் மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்பாக்கம் , ஓமந்தூரார் உள்ளிட்ட பத்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதென்று மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

madras eye
madras eye

இந்த 10 இடங்களில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் சிகிச்சைக்கு வருவதாகவும் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் – ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 பேர் வரை சிகிச்சை பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரையும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் 1.5 லட்சம் பேர் வரை, மெட்ராஸ்-ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் எனக் கூறிய அமைச்சர், ஆனால் தற்போது வரையிலும் ஒருவருக்கு கூட கண்பார்வை இழப்பு ஏற்படவில்லை என்றார். மேலும், சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ் – ஐ பாதிப்பு அதிமாக உள்ளது என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நோய் கண்ணில் உறுத்தல், சிவப்பு நிறமாக கண் மாறுதல், உள்ளிட்ட அறிகுறிகள் வாயிலாக கண்டறியப்படுகிறது என்றும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கையினால் தொடக்கூடாது என்றும் அப்படி தொட்டு விட்டு அருகே இருப்பவர்களை தொட்டால் அவர்களுக்கும் இந்த நோய் பரவும் என்றும் அறிவுறுத்தினார். இது எளிதில் பரவக்கூடிய நோய் என்பதால், நோய் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று, நான்கு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

நோய் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, அலுவலகம், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், மெட்ராஸ்-ஐ பாதிக்கப்பட்டவர்கள் சுய சிகிச்சை செய்யக்கூடாது என்றும் முறையான கண் மருத்துவரை அணுகி அவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். வீட்டில் ஒருவருக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டால் அந்த கண் நோய் உள்ளவர்கள் பயன்படுத்திய மருந்தை அந்த வீட்டில் உள்ள வேறு ஒருவரின் கண் நோய் பாதிப்புக்கு பயன்படுத்தக் கூடாது என மா.சுப்பிரமணியன் கூறினார்.

டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள நிலையில், அதன் பிறகு இதன் நோய் பாதிப்பு நீங்கிவிடும் என்றார்.
கண் நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள 90 சதவீதம் மருத்துவமனைகளிலும் இது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் ஓரிரு நாட்களில் வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மெட்ராஸ் ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என நம்பிக்கையூட்டிய மா.சுப்பிரமணியன், பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார். மூன்று,நான்கு நாட்கள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.
மெட்ராஸ் ஐ நோய்க்கு வழங்கப்படும் மருந்துகளில் தட்டுப்பாடு இல்லை என்றும்
கண் மருத்துவத்தைப் பொருத்தவரையில் போதுமான மருந்துகள் கை இருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். பாட்டி வைத்தியம் என்பது ஒரு காலத்தில் பொருந்தினாலும் தற்போது உள்ள ஒரு மாதம் வைரஸ் காலத்தில் மருத்துவர்கள் அணுகி சிகிச்சை பெறுவது முறையான தீர்வாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

MUST READ