குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக தன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை எதிர்த்து செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினருக்கு இடையிலான பணப்பரிமாற்றம் தொடர்பான தனிப்பட்ட நபர்களின் பிரச்சனைகாக காவல்துறை சார்பில் தன் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளதாக மனுதாரர் செல்வராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் உதவியுடன் போலி வங்கி கணக்கு தொடங்கி, போலி ஊதிய சான்று தயாரித்து கொடுக்கப்பட்டதாகவும் இதன் மூலம் ரூ.3 கோடியே 30 லட்சம் வரை மோசடி நடைபெற்றதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, அனைத்தும் தனிநபர் குற்றம் என்பதால் தனிநபர் குற்றத்தை காரணமாக வைத்து குண்டர் சட்டம் போட முடியாது என்று கூறி செல்வராஜ் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதாக தெரிவித்தனர்.
மேலும், யார் குண்டர் என்பதை அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றும், குண்டர் சட்டத்தை தேவை இல்லாமல் சாதாரணமாக பயன்படுத்த கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். சட்டவிரோதமாக ஒருநாள் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாலும் அது சட்ட விரோதம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.