மக்களை திசை திருப்ப ஆளுநர் நாடகமாடுகிறார்- அமைச்சர் மனோ தங்கராஜ்
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அரசியல் நாடகம் செய்கிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி போட்ட உத்தரவை திரும்பப் பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இது விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகமே…! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை நீக்குவதற்கு முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது;
நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், திசை திருப்பும் நோக்கத்தோடு ஆளுநர் இவ்வாறு பேசி வருகிறார். பொது சிவில் சட்டம் கொண்டுவரும் மத்தியஅரசு, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை ஏன் ஏற்கவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசில் அமைச்சர்களாக இருக்கும் 78 பேரில் 33 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன, அவர்கள் இன்னும் அமைச்சர்களாக தான் தொடர்கிறார்கள். இதற்கு பாஜக என்ன சொல்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.