Homeசெய்திகள்தமிழ்நாடுமேகதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடு- வைகோ கண்டனம்

மேகதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடு- வைகோ கண்டனம்

-

மேகதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடு- வைகோ கண்டனம்

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மற்றொரு மனு தாக்கல் செய்து மேகேதாட்டு அணை வழக்கை துரிதப் படுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கடந்த ஜூலை 7 ஆம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் வரவு- செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர், “மேகேதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற ஒன்றிய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மைப் பணி என்றும், மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்” என்றும் முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

இதற்கு முன்பு மேகேதாட்டு அணை தொடர்பாக ஜூலை 4 ஆம் தேதி துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, அணை கட்டுவதற்கு எல்லை அடையாளம் காணும் பணிகளை மேற்கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில் எல்லைகளை அடையாளம் காணுவதற்கும், அகற்றப்பட வேண்டிய மரங்களை கணக்கீடு செய்வதற்கும், கர்நாடக வனத்துறை சார்பில், 29 துணை வன அதிகாரிகளை நியமித்து, கூடுதல் முதன்மை தலைமை வனக் காப்பாளர் அனில்குமார் ரதன் உத்தரவு பிறப்பித்து உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

பெங்களூரு சதுக்கம், பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் தலா ஐவர்; பெங்களூரு, வன ரோந்து படை, சாம்ராஜ் நகர் சதுக்கம், பிலிகிரி ரங்கமலை புலிகள் காப்பகத்தில் தலா நால்வர்; மைசூரு சதுக்கம், மலை மாதேஸ்வரன் வன விலங்கு சரணாயலத்தில் தலா மூவர். காவிரி வன விலங்கு சரணாலயத்தில் ஒருவர் என 29 துணை வன அதிகாரிகள் நில அளவீடுப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், உடனடியாக சாம்ராஜ்நகர் சதுக்கத்தின் தலைமை வனக்காப்பாளர் அலுவலகத்தில் இப்பணியில் இணைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம்,16.02.2018 இல் வழங்கிய தீர்ப்பிலும், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது. 2007, பிப்ரவரி 5 ஆம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 192 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்த தீர்ப்பில், கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டிஎம்சி ஆக குறைத்து உத்தரவிட்டது. ஆனால் இந்த குறைந்த அளவு நீரைக் கூட கர்நாடகா திறந்து விட மறுக்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியும்,தமிழ்நாட்டின் மரபு உரிமையை மீறியும் மேகேதாட்டு அணை கட்டுமானப் பணியை கர்நாடக அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மற்றொரு மனு தாக்கல் செய்து மேகேதாட்டு அணை வழக்கை துரிதப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ