Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசின் போலி முத்திரை, போலி கையெழுத்து; கோடி கணக்கில் கனிமங்கள் கொள்ளை..!!

அரசின் போலி முத்திரை, போலி கையெழுத்து; கோடி கணக்கில் கனிமங்கள் கொள்ளை..!!

-

அரசின் முத்திரையை தவறாக பயன்படுத்தி தென் மாவட்டங்களில் உள்ள கனிம வளத்தை கடத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பல் சிக்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை வளம் அதிகம் கொண்ட மாவட்டம். மூன்று பக்கங்களிலும் கடல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வடக்குப் பகுதியை எல்லையாகக் கொண்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. அதிக மலைகள் நிறைந்த குமரி மாவட்டத்தில் மலைகளை வெட்டி எடுத்து கடத்தும் கனிமவள கடத்தல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீப காலமாக இந்த கனிமவள கொள்ளை தமிழக அரசியல் களத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் கனிமவள கடத்தலுக்கு எதிராக நேர கட்டுப்பாடு மற்றும் வாகன சோதனைகள், சுங்கச்சாவடி மூலம் கனரக வாகன சோதனை என பல்வேறு முறைகளில் கனிமவள கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசின் போலி முத்திரை, போலி கையெழுத்து; கோடி கணக்கில் கனிமங்கள் கொள்ளை..!!

மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் கனிமவளம் எடுக்க அரசு சார்பில் பாஸ் வழங்கப்பட்டு அந்த பாஸ் வைத்திருக்கும் லாரிகளுக்கு மட்டும் கனிமவளம் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பக்கத்து மாவட்டமான திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை உதவி ஆய்வாளர் மகேஸ்வரராஜ், தனி பிரிவு உதவி ஆய்வாளர் மாரி செல்வன் தலைமையிலான போலீசார் வடச்சேரியில் அப்டா மார்க்கெட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். போலீசாரின் சோதனையில் லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுவது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பாசை சோதனை செய்த போது அதுவும் போலியானது என கண்டுபிடித்தனர். அதில் அரசின் போலி முத்திரைகள்,கனிம வளத்துறை அதிகாரிகளின் போலி கையெழுத்து இருந்தது தெரியவந்தது.

அரசின் போலி முத்திரை, போலி கையெழுத்து; கோடி கணக்கில் கனிமங்கள் கொள்ளை..!!

அதன் பின்னர் லாரியை தொடர்ந்து வந்த இரண்டு சொகுசு கார்களையும் மடக்கி சோதனை செய்தனர். அதில் போலி அரசு முத்திரைகளும், 50க்கும் மேற்பட்ட போலியான பாஸ் இருந்ததையும் கண்டுபிடித்தனர். உடனடியாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் (32), டார்வின் ராஜ் (31),
டார்லின்ராஜ் (21), அனீஷ்குமார்(32),ஷராஜேஷ்(49), வினிஷ் ராஜ் (43),ரெதீஷ் (41), கேரளா மாநிலம் செங்கவிளை
என ஏழு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இரண்டு லாரியையும் இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் போலியான ரசீதை வைத்து கனிம வளம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் போலி பாஸ் வைத்து கனிம வளம் கடத்துவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது..

MUST READ