திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுவாமி சிலையை ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சிற்பி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான சிற்பக் கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த சிற்பக்கூடத்தில் செய்யப்பட்ட 1.5 டன் எடையிலான 7 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை, புதுக்கோட்டை அருகேயுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய மினி வேனில் எடுத்துச் சென்றனர். சிலையுடன் அங்கு சிற்பியாக பணிபுரியும் நாகராஜன் என்பவரும் வேனில் பயணித்தார்.
பல்லடத்தை அடுத்து காங்கேயம் சாலையில் நாச்சிபாளையம் பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக வேன் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் நாகராஜ் மற்றும் அவருடன் சென்ற மற்றொரு நபரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, 1.5 டன் சிலையை சிறிய வேனில் கொண்டுசென்றதே நாகராஜ் உயிரிழப்பிற்கு காரணம் என கூறி சிற்பக்கலை கூட உரிமையாளரை கண்டித்து நாகராஜின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.