”சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் நிற்காது”
சென்னையில் 85 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டதால் கன மழை பெய்தும் தண்ணீர் தேங்கவில்லை என வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை சந்திப்பில் மழைநீர் கால்வாய் பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், “சென்னையில் 85 சதவீதம் மழைநீர் வடிகால் பணி முடிவடைந்ததால், கன மழை பெய்தும் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை. தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் சென்னையில் 4 அமைச்சர்கள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதால், சென்னையில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கவில்லை. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த பணிகள் செய்திருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது.
வருகின்ற வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மழை நீர் வடிகால் பணி முழுமையாக முடிவடைந்து விடும், சென்னை புறநகர் பகுதியில் கொசஸ்தலை ஆறு மற்றும் கோவளம் பகுதிகளில் 4900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,190 கிலோமீட்டர் அளவில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வரும் காலங்களில் சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்கும் நிலை ஏற்படும்.சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் நிற்காது” என்றார்.