தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் h1 n1 வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவுவதை ஒட்டி நாளை( 16-ம் தேதி) முதல் 26-ஆம் தேதி வரை 1 முதல் முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. காய்ச்சல் பரவுவதை கண்டு பொதுமக்கள் பதற்றமோ, பயமோ அடைய வேண்டாம். தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை. உலகம் முழுவதும் சிறு வயதிலேயே மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் இதுதொடர்பாக ஆய்வு செய்ய இதய சிகிச்சை வல்லுநர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் காய்ச்சல் காரணமாக விடுமுறை விடும் அளவுக்கு சூழல் நிலவவில்லை. இன்ப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பால் புதுவையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த சூழல் இங்கு இல்லை” என விளக்கம் அளித்தார்.