சொத்து பரிமாற்றத்தில் ஆள்மாறாட்டத்தை தடுக்க விற்பவரின் கைரேகையை முந்தைய பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் புதிய நடைமுறையை பதிவுத்துறை அமல்படுத்தியுள்ளது.
சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்வதில் ஆள்மாறாட்டங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க பத்திரப்பதிவு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சொத்து விற்பவர், வாங்குபவர் ஆகியோரின் கைரேகை உள்ளிட்ட, ‘பயோமெட்ரிக்’ விபரங்கள், புகைப்படங்கள் பெறப்படுகின்றன. இந்த விபரங்களின் உண்மை தன்மையை, ‘ஆதார்’ பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் வசதி, அனைத்து அலுவலகங்களிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதி இருந்தும், பல இடங்களில் ஆள் மாறாட்டம் நடப்பதாக பத்திரப்பதிவு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், சொத்து பரிமாற்றத்தில் ஆள்மாறாட்டத்தை தடுக்க விற்பவரின் கைரேகையை முந்தைய பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் புதிய நடைமுறையை பதிவுத்துறை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறையால் ஆள்மாறாட்டங்கள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய நடைமுறையின் படி ஒரு சொத்து பத்திரம் பதிவுக்கு வரும் போது, விற்பவரின் கைரேகை, அதன் முந்தைய பதிவின்போது பெறப்பட்டதுடன் ஒத்துப்போனால் மட்டுமே புதிய பதிவு மேற்கொள்ளப்படும். இதில், வேறுபாடு இருந்தால், தற்போது தாக்கல் செய்யப்படும் பத்திரம் நிராகரிக்கப்படும்.