நாளை முதல் 500 ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை
நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், “தக்காளி விலை சமீபகாலமாக உயர்ந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 67 பண்ணை பசுமை கடைகள் 111 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து அது 300 நியாய விலை கடைகளாக அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பிற மாநிலங்களிலும் தக்காளி விலை உயர்ந்த போதும் அங்குள்ள மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்த எடுக்காத நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தக்காளியை பொறுத்தவரை உற்பத்தி குறைவாகவும், தேவை அதிகமாகவும் உள்ளதே விலை உயர்வுக்கு காரணம்.
வணிகர்கள் எங்கும் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை, செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தவில்லை. பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் உத்தரவின் படி, தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மாவட்டம் தோறும் 10 நியாய விலைக் கடைகள் என சராசரியாக ஒரு கடைகளில் 50 கிலோ தக்காளி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வரத்து அதிகரித்தால் தக்காளியின் விற்பனையும் அதிகரிக்கப்படும். தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை, உணவு துறை அதிகாரிகளுடன் விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.