தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம்- அமைச்சர் பொன்முடி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 கூடுதலாக ஊதியம் வழங்கப்படும், உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள, பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றபடும், பல்கலைக்கழகங்களில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோரை, தேர்வு செய்ய குழு அமைத்து வெளிப்படையாக தேர்வு செய்ய வேண்டும், பல்கலைக்கழக விதிகளில் மாற்றம் ஏற்படுத்தி, ஒரே மாதிரியான ஊதியம், தகுதி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும். காலியாக உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியிடம் நிரப்பப்படும். 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. மாணவர்கள் கல்லூரிகள் மாறும் போது அவர்களுக்கு ஒரே பாடத்திட்டம் எளிதாக இருக்கும். அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக சந்திப்போம்” என்றார்.