பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது- அமைச்சர்கள் பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்திய அமலாக்கத்துறைக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “அமைச்சர் செந்தில் பாலாஜி வெகு விரைவில் பூரண குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிகளை ஒன்றிய அரசு பழிவாங்குகிறது. பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் திமுகவுக்கு உள்ளது. டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்கத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் தொடங்கியுள்ள இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்ச மாட்டார். ஒன்றிய அரசின் அச்சுறுத்தல்களுக்கு திமுக அஞ்சப்போவதில்லை. அரசியலுக்காக ஒன்றிய அரசு செய்யும் நிகழ்வை மக்கள் புரிந்துகொள்வார்கள். திமுக கடந்த காலங்களில் பல அடக்குமுறைகளை சந்தித்துள்ளது, அனைத்திலிருந்தும் மீண்டு வருவோம். இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல.
இதேபோல் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை நலம்விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசு அச்சுறுத்தலுக்கு திமுக அஞ்சாது. பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது – சட்டப்படி சந்திப்போம். அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார்” என்றார்.