அமைச்சராக இருந்தால் படங்களில் நடிக்க கூடாது என சட்டம் கிடையாது- அமைச்சர் ரகுபதி
அமைச்சராக இருந்து கொண்டு, திரைப்படங்களில் நடிக்க கூடாது என்ற சட்டம் கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள மாமன்னன் திரைப்படம் வருகிற இன்று வெளியானது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. மேலும் பட பிரமோஷன்ளின் போது ஜாதி கலவரம் ஏற்படும் வகையில் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை இயக்குனர் மாரி செல்வராஜ் பேசினார். இந்தப் படத்திற்காக வெளியிட்ட போஸ்டரில் மாமன்னன் என்ற பெயரில் அதன் கீழ் நாய், பன்றி படத்தை போட்டு இருப்பது மாமன்னர்கள் என்று அழைக்கப்படும் ராஜராஜ சோழன், பூலித்தேவன், மருது பாண்டியர் ஆகியோரை கொச்சைப்படுத்துவது போன்று அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “மாமன்னன் படம் பார்த்தேன், நன்றாக உள்ளது. படம் தடைகளை தாண்டி மிகப்பெரிய வெற்றி பெறும். உதயநிதி தொடர்ந்து நடிக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அமைச்சராக இருந்து கொண்டு, திரைப்படங்களில் நடிக்க கூடாது என்ற சட்டம் கிடையாது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும். ‘மாமன்னன்’ கடைசி படம் என்று கூறியிருப்பதை உதயநிதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.’மாமன்னன்’ திரைப்படம் தடைகள் எல்லாம் தாண்டி மிக சிறப்பாக வெற்றி பெறும்” என்றார்.