சிதம்பரம் கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசனை- சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தீட்சிதர்கள் என்றாலே பிரச்னைதான், சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படுகிறார்கள்.. விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். அதனையே அரசு தட்டி கேட்கிறது. 200 தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆக்கிரமித்துள்ளனர்
ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும். சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசித்துவருகிறோம்” என்றார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்து, பொதுமக்களிடம் தகராறு செய்து வருகின்றனர். இதை கேட்ட அதிகாரிகளிடமும் தீட்சிதர்கள் அத்துமீறி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.