- Advertisement -
50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது அதிர்ச்சியளிக்கிறது – செங்கோட்டையன்
50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதாமல் உள்ளது குறித்து அரசு தனி ஆணையம் ஒன்றை அமைத்து அதன் முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிடவேண்டும் என முன்னாள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபி அருகே உள்ள அளுக்குளி, மொடச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் 70 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை கோபி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடந்து வரும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்திற்கான தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக வரலற்றில் இதுவரை இல்லாத அளவில் பொதுத்தேர்வை இவ்வளவு மாணவர்கள் எழுதாமல் உள்ளனர். தமிழ் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் நிலை குறித்து அறிய அரசு தனியாக கமிஷன் ஒன்றை அமைத்து அதன் முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிட வேண்டும்” எனக் கூறினார்.