நாளை மீண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து பணிமனைகளை முற்றுகையிட்டுப் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், உடனடியாகபணிக்கு திரும்புவதாகவும் உறுதியளித்தனர்.
இந்த நிலையில், நாளை மீண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து தொழிலாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 1 வாரத்திற்குள் சிறப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்
என கூறினார்.