தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசு
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பொறியாளர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகக் தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என் மீது நம்பிக்கை வைத்து மின் துறை பொறுப்பை வழங்கியுள்ளார். அந்த நம்பிக்கையை காப்பாற்றக்கூடிய வகையில் நிச்சயம் செயல்படுவேன். தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மழை பெய்துவருவதால் ஆங்காங்கே மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை உடனுக்குடன் சீரமைக்க அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக சென்னையில் இரவு 2 மணி வரை இருந்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.