ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின், மாதம் ஒருமுறை மின் அளவீடு- தங்கம் தென்னரசு
திமுக ஆட்சி அமைந்த பிறகு மின்வாரியத்திற்குக் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் எந்தவித சமரசமும் இல்லை, தரமான பொருட்கள் மட்டுமே வாங்கப்படுகிறது என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் துணைமின் நிலையத்தில் உள்ள 33/11 Kv மின்மாற்றி ஆயில் வெடிப்பு ஏற்பட்டு பழுதானதை அடுத்து பட்டினப்பாக்கத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, “கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையில் பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மூன்று துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 49 மின் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. 51 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 71 பில்லர் பாக்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி சீரமைக்கப்பட்டு, மாலைக்குள் மின் விநியோகம் சீராகும். அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதிக மின்னழுத்த காரணமாகவே பல இடங்களில் மின்சார தடை என்பது ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு மின்வாரியத்திற்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் எந்தவித சமரசமும் இல்லை தரமான பொருட்கள் மட்டுமே வாங்கப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது, தற்போது வரை அந்த டெண்டர் குறித்து இறுதி செய்யப்படவில்லை. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின், மாதம் ஒருமுறை மின் அளவீடு செய்யும் முறை அமலுக்கு வரும்” என்றார்.