Homeசெய்திகள்தமிழ்நாடுபுயலை எதிர்கொள்ள ரெடி.. 3 லட்சம் மின்கம்பங்கள் தயார் - தங்கம் தென்னரசு..

புயலை எதிர்கொள்ள ரெடி.. 3 லட்சம் மின்கம்பங்கள் தயார் – தங்கம் தென்னரசு..

-

மிக்ஜம் புயல்
மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் இருப்பதாக  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, புதுச்சேரிக்கு 440 கிலோ மீட்டர் மற்றும் சென்னைக்கு 450கி.மீ தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல வானிலை மையம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை ( நவம்பர் 3ம் தேதி ) உருவாகும் இந்த மிக்ஜம் புயலானது, நாளை மறுநாள் ( நவ.4 தேதி) சென்னைக்கு மிக அருகே வரவுள்ளது. தொடர்ந்து 5ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது. புயல் நெருங்கும்போது, தரைக்காற்று பலமாக வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம்
மின்சார வாரியம்

சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இந்த புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புயலை எதிர்க்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ மின்னகத்திற்கு வரும் அழைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ள இடங்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு மையங்களில் மின்சாரத்துறை ஊழியர்கள் களப்பணியாற்ற உள்ளனர். கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

MUST READ