கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் அருகே கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதில் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 19 பேரும், சேலம் மருத்துவமனையில் 8 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும் புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சந்தித்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் எ.வ.வேலு மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.