மகளிர் உரிமைத் திட்டம்- இந்தியாவே வாழ்த்துகிறது: உதயநிதி ஸ்டாலின்
1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1000 எனும் இந்த மகத்தான திட்டத்தை தமிழ்நாடு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமே வாழ்த்துகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கிவைத்தார். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மகளிருக்கு குடும்பச்சொத்தில் சம உரிமையை நிலைநாட்டிய முத்தமிழ் அறிஞர் அவர்களின் பெயரிலே, மகளிரின் பொருளாதார உரிமையை நிலைநாட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்ணா பிறந்த காஞ்சியில் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள்.

1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1000 எனும் இந்த மகத்தான திட்டத்தை தமிழ்நாடு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமே வாழ்த்துகிறது. வரலாறாக நம்மை வழி நடத்தும் அண்ணாவின் பிறந்த நாளில், கலைஞர் நூற்றாண்டில் மகளிரின் மேன்மைக்காக செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டமும் சரித்திரம் படைப்பது உறுதி. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் என் அன்பும், வாழ்த்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.