திருச்சி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விமான மூலம் திருச்சி வந்தடைந்த முதலமைச்சரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இன்று முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க வினர் வரவேற்றனர். தொடர்ந்து முதலமைச்சரை வரவேற்பதற்காகவும், அவரை காணவும் காத்திருந்த தி.மு.கவினரையும் பொதுமக்களையும் நடந்து சென்று சந்தித்தார். விமான நிலைய நுழைவு வாயில் வரை நடந்தே சென்று சந்தித்தார். அதன் பின் அவர் காரில் ஏறி புறப்பட்டார்.
திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக கும்பகோணம் செல்லும் முதலமைச்சர் கும்பகோணத்தில் இருந்து இன்று மாலை மயிலாடுதுறை செல்கிறார். அங்கு தருமபுர ஆதீனம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின்பு நாகை செல்லும் முதலமைச்சர் அங்கு இரவு தங்குகிறார். நாளை கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன்பின்பு நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல்வர் கள ஆய்வு திட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 27ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அங்கிருந்து திருச்சி வந்து தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.