கள ஆய்வில் முதலமைச்சர்- அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கிய மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஆட்சி தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.
அப்போது அவர்களுடன் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசின் திட்டங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.. அனைத்து திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன், நிலுவையில் உள்ள சாலை பணிகளை முடித்து பொதுமக்களின் இன்னலை போக்க வேண்டும். கல்வியில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது இதனை மாற்றி அமைக்க வேண்டும்
அதிகாரிகளும் – அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும், மாவட்ட நிர்வாகமும், தலைமைச்செயலகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தான் நல்லாட்சியின் இலக்கணம். தொடர்ந்து மக்களுடன் இருந்து அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்த செயல்படுவீர்கள் என நம்புகிறேன். மாவட்டங்களின் வளர்ச்சி வேளாண் சார்ந்தது மட்டுமின்றி, தொழில் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். வேளாண் பொருட்கள் உற்பத்தியை பெருக்க உடனடி முயற்சிகள் தேவை. தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.