பாஜக எரிச்சலடைந்திருப்பதால் அமலாக்கத்துறை ரெய்டு- மு.க.ஸ்டாலின்
பாஜக எரிச்சலடைந்திருப்பதன் வெளிப்பாடுதான் அமலாக்கத்துறை சோதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க புங்களூருக்கு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். இன்றும் நாளையும் பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன. இது பாஜக ஆட்சிக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எரிச்சலடைந்திருப்பதன் வெளிப்பாடுதான் அமலாக்கத்துறை சோதனை. அமலாக்கத்துறை சோதனை பற்றி கிஞ்சித்தும் திமுக கவலைப்படவில்லை. தொடர்ந்து 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது பொன்முடி மீதான வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. பொன்முடி மீதான குற்றச்சாட்டை அவர் சட்டரீதியாக சந்திப்பார்.
வடமாநிலங்களில் பின்பற்றிய உத்தியை தற்போது தமிழ்நாட்டில் பாஜக பயன்படுத்திவருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி தர தயாராக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. எங்களுக்காக ஆளுநர் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை நடத்திவருகிறார். தற்போது அமலாக்கத்துறையும் நடத்திவருகிறது. பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் எங்களுக்கு தேர்தல் வேலை எளிதாகிறது. அமலாக்கதுறை சோதனையைப்பார்த்து திமுக பயப்படாது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை முடக்குவதற்காக இத்தகைய நடவடிக்கை.” என்றார்.