துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுங்கள்! பொன்முடிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை 13 நேரத்துக்கு பிறகு இரவு நிறைவடைந்தது. அதன்பின் பொன்முடி மற்றும் அவரது மகன் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு வாக்குமூலம் பெற்றபின் அவரை விடுவித்தனர். இதனிடையே சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். இன்று மாலை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள நிலையில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், துணிச்சலுடணும் சட்ட ரீதியாகவும். எதிர்கொள்ளுமாறு பொன்முடிக்கு அறிவுரை கூறினார்.
ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என பொன்முடியிடம் முதலமைச்சர் தெரிவித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.