மோடி ஆட்சியின் பலவீனத்தால் மீனவர் மீது தாக்குதல்- மு.க.ஸ்டாலின்
பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது. கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம். தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தியுள்ளோம். கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். ஆண்டுக்கு விசைப்படகுக்கு டீசல் 18,000 லிட்டர், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மீன்பிடி தொழிலில் 5வது பெரிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. 1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. வகை வகையாக கடலில் கலம் செலுத்தியவர்கள் எல்லோரும் நம் தமிழர்கள் தான்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளில் 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்கள் கைது, 83 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் மீனவர்கள் மீதான இலங்கை படை தாக்குதல் தொடர்கிறது.
தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பாஜக அரசே பொறுப்பு. மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும், கச்சத்தீவு மீட்கப்படும் என மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு இந்த மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது” என்றார்.