”உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் நுழையும் பொழுதுதான் சமூக நீதி முழுமையடைகிறது”
உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் நுழையும்போதுதான் சமூகநீதி முழுமையடைகின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் 225 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டினுடைய பள்ளிக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள், கொண்டாட்டத்திற்குரிய நாளாக அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டு குழந்தைகள் எல்லோரும் கல்வி கற்கவேண்டும். உயர் படிப்புகளுக்குப் போகவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஏனென்றால், கல்வி நமக்கு இங்கே சுலபமாக கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் கல்வி நமக்கு எட்டாக்கனியாக இருந்தது. இன்றைக்கு நாம் எல்லோரும் படிக்கிறோம் என்றால், அதற்குப் பின்னால், நம்முடைய முன்னோர்கள் நடத்திய, ஏராளமான போராட்டங்கள்தான் காரணமாக இருக்கிறது.
நீதிக்கட்சி காலத்தில் இருந்து சமூக நீதியை வலியுறுத்தி வரும் சமூக சீர்திருத்தத் தலைவர்களால் தான் இந்த மாற்றத்தை நம்மால் உருவாக்க முடிந்தது. இந்த மாற்றத்தை இன்னும் சிறப்பாக்க நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக கொண்டுவரப்பட்டதுதான், ‘அனைவருக்கும் ஐ.ஐ.டி’ திட்டம். மாணவர்களுடைய படிப்பதற்கான செலவை அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. படிப்ப முடிச்சிட்டு நீங்க வெளிய வரும்போது உங்களோட உலகம் ரொம்ப பெரியதாக இருக்கும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் மலர வேண்டும் என்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கின்ற மாதிரி இருக்க வேண்டும். மாணவர்களிடம் நான் பேசும்போதெல்லாம் சொல்கிறதுதான், மறுபடியும் இங்கேயும் சொல்ல விரும்புறேன். அரசு ஏற்படுத்தித் தருகின்ற வாய்ப்புகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிங்க! படிங்க! படிங்க! இதுதான் என்னோட வேண்டுகோள். படிக்கின்ற காலத்தில் கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது” என்றார்.