குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- மு.க.ஸ்டாலின்
நீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் இன்று (30-9- 2025) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த திருமதி.முப்புடாதி (வயது 67), திரு.முருகேசன் வயது 65), திரு. இளங்கோ வயது 64) திருமதி தேவிகலா (வயது 42), திருமதி.கெளசல்யா (வயது 29) மற்றும் செல்வன், நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.காராமச்சந்திரன் அவர்களை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.