மருத்துவ முகாம்களை செயல்படுத்தும் அமைச்சர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு- முதல்வர்
பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் மாண்புமிகு அமைச்சர்கள் – மருத்துவர்கள் – செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகருக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுவருகிறது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது. மாலை 5 மணி வரை நடைபெறும் மருத்துவ முகாமில் பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
வருமுன் காப்போம் திட்டத்தை வகுத்தளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் மற்றுமொரு முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடெங்கும் 103 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வழக்கமான மருத்துவ ஆலோசனைகளோடு,… pic.twitter.com/ZPOPmQf24Z
— M.K.Stalin (@mkstalin) June 24, 2023
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வருமுன் காப்போம் திட்டத்தை வகுத்தளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் மற்றுமொரு முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடெங்கும் 103 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.வழக்கமான மருத்துவ ஆலோசனைகளோடு, சிறப்புப்பிரிவு மருத்துவர்களைக் கொண்டு, தொற்று நோய்களையும் தொற்றா நோய்களையும் உடனடியாகக் கண்டறியக்கூடிய பரிசோதனைகளையும் மேற்கொள்ளக் கூடிய வகையில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏழை – எளிய நோயாளிகளுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில், அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து நடத்தும் இந்த முகாம்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்தப் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் மாண்புமிகு அமைச்சர்கள் – மருத்துவர்கள் – செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.