தமிழகம், புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், மத்தியமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இன்றும், நாளையும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.