மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை வனத்துறையினர் உதவியுடன் முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தாயை பிரிந்த குட்டி யானை அங்கும் இங்கும் அலைந்து திரிந்து தாயை தேடி அலைந்தது. இதனைத்தொடர்ந்து தாய் யானையை தேடி குட்டி யானையுடன் வனத்துக்குள் வனத்துறையினர் பயணம் மேற்கொண்டனர். இதில் குட்டி யானையானது தாய் யானையுடனோ அல்லது யானை மந்தைகளுடனோ (கூட்டங்களுடனோ) சேரவில்லை என்றால் அந்த குட்டி யானையை யானைகள் பாதுகாப்பில் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
மருதமலை வனப்பகுதியில் மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முதல் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “குட்டி யானையை முகாமுக்கு கொண்டு செல்வது குறித்து தலைமை வன உயிரின காப்பாளர் முடிவு எடுப்பார். அதன் பிறகு முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க விடப்படும் என்று கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து குட்டி யானையை வனப்பகுதியில் தாயுடன் சேர்க்க முடியாத காரணத்தினால் குட்டி யானையானது முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.