நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி போலியாக பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், நில மோசடி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த சிபிசிஐடி போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிறைக்குள் வைத்தே மீண்டும் கைது செய்துள்ளனர்.